மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் மீது கேரள மாணவி பாலியல் புகார்; விசாரணை குழு முன்பு ஆஜரானார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்மலாதேவி விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், தற்போது கேரளாவை சேர்ந்த மாணவி பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக விசாரணை குழு முன்பு நேற்று அந்த மாணவி ஆஜரானார்.
மதுரை,
கல்லூரி மாணவிகளுடன் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் அடங்குவதற்குள், மீண்டும் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் ஊடக ஆராய்ச்சி மையம் (இ.எம்.எம்.ஆர்.சி.) செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் தலைவராக பேராசிரியர் கர்ணமகாராஜன் உள்ளார். அவரிடம் கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் காயங்குளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 2 வருடங்களாக பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.
அவருக்கு ஆராய்ச்சி படிப்பில் வழிகாட்டியாக இருப்பதற்காக பேராசிரியர் கர்ணமகாராஜன் ரூ.2 லட்சம் பணம் பெற்றார் என்றும், தன்னை பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் குற்றம்சாட்டி பதிவாளர் சின்னையாவிடம், அந்த மாணவி புகார் தெரிவித்த விவகாரம் பரபரப்பாகி வருகிறது. இந்த புகார் மீதான விசாரணை நேற்று பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இந்த விசாரணை பல்கலைக்கழகத்தின் கன்வீனர் கமிட்டி தலைவரும், தமிழக சட்டத்துறை செயலாளருமான பூவலிங்கம், உறுப்பினர்கள் சந்தோஷ்குமார், ராமகிருஷ்ணன் மற்றும் பதிவாளர் சின்னையா ஆகியோர் தலைமையில் நடந்தது. விசாரணை குழு முன்பு, புகார் தெரிவித்த மாணவி மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த விசாரணையின் போது, பி.எச்டி., படிப்பில் சேரும் போது பணம் கேட்டார் என்ற விவரத்தை ஏன் முன்கூட்டியே பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினர். மேலும், பாலியல் ரீதியான தொந்தரவு செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன? என்பது குறித்தும் கேட்டதாக தெரிகிறது.
பணம் கொடுத்த விவகாரத்தை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் தெரிவித்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சியதாகவும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருந்தன என்பதற்கு பேராசிரியர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்., செல்போன் அழைப்புகள், வாட்ஸ்–அப் தகவல்கள் ஆகியவற்றை மாணவி சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆராய்ச்சி மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்ச்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால், விசாரணையில் சக பேராசிரியர்கள் தூண்டுதலின் பேரில், அந்த மாணவி புகார் தெரிவித்ததாக தெரியவந்தது.
எனவே, அதேபோல, ஏதேனும் வற்புறுத்தல்கள் உள்ளதா? என்ற அடிப்படையிலும் மாணவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. முடிவில், சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் புகார் குறித்து விசாரணை நடத்திய பின், புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை குழு அறிவித்துள்ளது. இதனால், விடுமுறை நாளாக இருந்தாலும் நேற்று மாலை வரை பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதற்கிடையே, இ.எம்.எம்.ஆர்.சி. துறையில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதாக கூறி தற்போது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு எதிராக அந்த துறையில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த போராட்டம் மோதலில் முடிந்து, நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனவே காழ்ப்புணர்ச்சியால் அவர் மீது பாலியல் புகாரை தெரிவித்து இருக்க வாய்ப்புள்ளதாக பல்கலைக்கழக வட்டாரத்தில் கூறப்படுகிறது. பாலியல் புகார் கூறிய மாணவி கேரள மாநிலத்துக்கு ஆராய்ச்சி கட்டுரை தொடர்பாக சென்ற போது, அங்கு உரிய உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால், மீண்டும் அதே பணியை மதுரை பல்கலைக்கழகத்தில் தொடர வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் புகார் தெரிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.