தக்கலை அருகே டாஸ்மாக் பாரில் 100 போலி மது பாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது


தக்கலை அருகே டாஸ்மாக் பாரில் 100 போலி மது பாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 9:36 PM GMT)

தக்கலை அருகே டாஸ்மாக் பாரில் 100 போலி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே மருந்துக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடைக்கு அருகே பார் அமைந்துள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பு மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பாரில் மதுவிற்கப்படுகிறதா? என்ற உண்மையை கண்டுபிடிக்க போலீஸ் ஏட்டு ஒருவர் சாதாரண உடையில் சென்று மது பாட்டில் வாங்கினார். அந்த மதுவை பரிசோதனை செய்த போது, அது போலி மது என்ற திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது.

பின்னர் நாகர்கோவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ராதா ஆகியோர் நேற்று காலையில் பாரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாரின் பின் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் பார் உரிமையாளர் சேம்ராஜ் (வயது 51) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இவர் அருமனை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போலி மதுவை வாங்கி, டாஸ்மாக் மதுவை போல் லேபிள் ஒட்டி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 100 போலி மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், பார் உரிமையாளர் சேம்ராஜ், ஊழியர்கள் ரவி, கிருஷ்ணபிரசாத், அனுபிரசாத் ஆகியோரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் மார்த்தாண்டம் மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இந்த போலி மது தயாரிப்பதில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டாஸ்மாக் பாரில் 100 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுபிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story