மனைவி, 2 மகள்களை கொலை செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை


மனைவி, 2 மகள்களை கொலை செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 9:37 PM GMT)

மனைவி, 2 மகள்களை கொலை செய்த வழக்கில், பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

சின்னமனூர்,

மனைவி, 2 மகள்களை கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளிவந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள க.புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 49). இவர், பர்னிச்சர் கடை நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி ஜமுனா (38) மற்றும் 2 மகள்களை கொலை செய்தார். பின்னர் அவரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

பின்னர் அவருக்கு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் முருகன் வெளியில் வந்தார். அதன்பின்னர் சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து அவர் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் தங்கியிருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை நீண்ட நேரம் தட்டிப்பார்த்தும் திறக்கப்படவில்லை. இதுகுறித்து சின்னமனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது முருகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அருகில் மதுபாட்டில் மற்றும் விஷ பாட்டில்களும் கிடந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story