தேனியில் அரசு பொருட்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனை


தேனியில் அரசு பொருட்காட்சி நடத்துவது குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 9 Dec 2018 5:00 AM IST (Updated: 9 Dec 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தேனி,

தேனியில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி 45 நாட்கள் நடத்தப்பட உள்ளது. அதன் தொடக்க விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பொருட்காட்சியில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் குறித்தும், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசுத்துறை மற்றும் சார்பு நிறுவனங்கள் சார்பில் 39 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். பொருட்காட்சிக்கு காவல்துறையின் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்தல், போக்குவரத்து சீர்செய்தல், வருவாய்த்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தேனி அல்லிநகரம் நகராட்சியின் மூலம் பொருட்காட்சி மைதானத்திற்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மைதானத்தினை சீர்செய்தல், குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுதல், போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்குதல், தீயணைப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்பில் செய்ய வேண்டிய பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story