நொய்யல் ஆற்றில் நுரையுடன் சாயக்கழிவுநீர் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


நொய்யல் ஆற்றில் நுரையுடன் சாயக்கழிவுநீர் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2018 4:09 AM IST (Updated: 9 Dec 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

நொய்யல் ஆற்றில் நுரையுடன் சாயக்கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லூர்,

திருப்பூர் பின்னலாடை துறையின் ஒரு அங்கமாக சாய ஆலைகள் இயங்கிவருகிறது. திருப்பூர் மாநகர வழியாகவும், புறநகர் பகுதி வழியாகவும்,நொய்யல் ஆறு செல்கிறது. நொய்யல் ஆற்றையொட்டி அருகில் பல சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சாயத்தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஒரு சில சாயஆலை நிறுவனங்கள் சாயக்கழிவுகளை சுத்திகரிக்காமல் நொய்யலாறு மற்றும் கிளைஓடைகளிலும், அருகே செல்லும் சாக்கடை கால்வாயிலும் மறைமுகமாக இரவு நேரங்களில் திறந்து விடுவதால் பல வண்ணங்களில் தடுப்பணை மற்றும் மதகுகள் வழியாக நீர் விழும் போது ரசாயனம் கலந்த நுரை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆனால் திருப்பூர் மாநகரை கடந்து செல்லும் நொய்யல் ஆற்றில் பல தடுப்பணைகள் உள்ளன. அந்த தடுப்பணைகளை கடந்து வரும்போது ஆற்று நீரில் நுரை ஏற்படுவதில்லை. நல்லூரையடுத்த, காசிபாளையம் தடுப்பணையில் இருந்து நொய்யல் நீர் செல்லும் வழியெங்கும் நுரைபொங்க நொய்யல் ஆற்றுநீர் செல்கிறது. அதேபோன்று முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாணிக்காபுரம் புதூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள அணைப்பாலம், கரியகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள தடுப்பணையில் ஆற்று நீர் நுரையுடன் செல்கிறது.

ஆனாலும் அவ்வளவு நுரை எதனால் ஏற்படுகிறது என தெரியவில்லை. உயரத்தில் இருந்து தண்ணீர் விழுவதால், நுரை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பச்சை நிறத்தில், தடுப்பணையில் இருந்து நுரை பொங்க சாயக்கழிவுகள் வழிந்தோடியதை கண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம். இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சாயக்கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து சுத்திகரிப்பு மைய பிரதிநிதிகள் தாங்கள் இந்த தவறு செய்வதில்லை என மறுத்து வரும் நிலையில் மீண்டும், மீண்டும் சாயக்கழிவுகளினால் நுரையுடன் வந்த வண்ணமே உள்ளது.

குறிப்பாக காசிபாளையம் தடுப்பணை மற்றும் மாணிக்காபுரம், ஊத்துக்குளி சாலை, அணைப்பாலம் தடுப்பணைகளில் கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரப்பகுதிகளின் சாக்கடை மற்றும் கழிவுநீர் (செப்டிக் டேங்க்) லாரி லாரிகள் மூலம் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், ஆலைகளில் இருந்து நேரடியாக கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.





Next Story