மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை, டெக்ஸ்டைல்ஸ் தொழில்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - திருப்பூரில் ஜி.கே.மணி பேட்டி


மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை, டெக்ஸ்டைல்ஸ் தொழில்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் - திருப்பூரில் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2018 4:22 AM IST (Updated: 9 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் பின்னலாடை, டெக்ஸ்டைல்ஸ் தொழில்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

திருப்பூர்,

பா.ம.க.வின் திருப்பூர் மாநகர், மாவட்டம் சார்பில் வடக்கு, அவினாசி, தெற்கு, பல்லடம் தொகுதி நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஆர்.பிரதீப்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாநில அரசு கேட்ட நிவாரண தொகையை குறைக்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும். கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதை மத்திய அரசு தடுக்க வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ள மாவட்டங்கள்.

இதன் மூலம் ஏற்றுமதி, அன்னிய செலாவணி அதிகம் ஈட்டப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது எந்த நெரிசலும் இல்லை. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நடவடிக்கைகளால் தொழில் பின்னடைவை ஏற்பட்டதையே இது பிரதிபலிக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து டியூட்டி டிராபேக் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தி 100 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைந்துவிட்டது. 500 பேர் பணியாற்றிய நிறுவனத்தில் 300 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர்.

இது தமிழகத்திற்கு பெரும் பின்னடைவு. இதனால் பின்னலாடை மற்றும் டெக்ஸ்டைல்ஸ் தொழில்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். திருப்பூர் மாநகராட்சி, கோவை, ஈரோடு மாநகராட்சி உள்ளிட்ட 12 மாநகராட்சிகளில் குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டுவரி, கடைகளுக்கான வரி, சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குப்பைவரி, பாதாள சாக்கடை வரி என புதிய வரிகளும் விதிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.

குப்பை வரி, சாக்கடை கால்வாய் வரியை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள பாசன திட்டங்கள், நீர் ஆதாரங்களை பெருக்கி, பாதுகாக்க வேண்டும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனைமலை-நல்லாறு, பாண்டியாறு -புன்னம்பலா, பரம்பிக்குளம்-ஆழியாறு உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த வேண்டும். உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்று திருப்பூர் மாவட்டம் உள்பட 13 மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விவசாயிகளுக்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதுடன், அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி இடத்தை கையகப்படுத்தி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. மின்சாரத்தை தரைவழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பூச்சியியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதை கைவிட்டு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். புதுச்சேரியில் புதிய பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தையும் தொடங்க வேண்டும்.

உழவர்சந்தையில் திருப்பூரில் இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் வேளாண் விற்பனை துறை தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் சுகாதாரசீர்கேடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது. திருப்பூரில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதால் வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பேரூராட்சியில் சுமார் 6 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வெளிமாநிலத்தவர்கள் அதிக வருவதால் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல நேற்றுகாலை பா.ம.க.வின் திருப்பூர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் தாராபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் மாதவன், பொங்கலூர் மணிகண்டன், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் திசை மஞ்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய திட்டங்களுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கி விரைந்து செயல்படுத்த வேண்டும். டெல்டா பாசன பகுதிகளில் நெல் உற்பத்தி பாதிப்பை சரி செய்து விவசாயிகளின் நலன் கருதி அந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமராவதி பாசன பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். அமராவதியில் இருந்து வீணாகும் உபரி நீரை வட்டமலைக்கரை அணைக்கு வழங்க புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும். மேற்கு மண்டலத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் குருத்துப்புழுக்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். ஏட்டுக்கல்வியை மட்டும் மாணவர் களுக்கு போதிக்காது, மனதை பண்படுத்தக்கூடிய வாழ்வியல் சார்ந்த கல்வியையும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த வேண்டும். மதுவிற்பனை நேரத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story