மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரம்: போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் வாலிபரின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
பூந்தமல்லி,
தேனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் திருவண்ணாமலையை சேர்ந்த குமரன் (26). டிரைவராக வேலை செய்து வருகிறார். இருவரும் கோயம்பேட்டில் அறையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் பிரபாகரனுக்கு பிறந்தநாள் என்பதால் இருவரும் நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம், இளங்கோ நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி உள்ளனர். போதை அதிகமானதால் டாஸ்மாக் பாரில் இருந்த ஒருவரிடம், குமரனும், பிரபாகரனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுபாட்டிலை போட்டு உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் பார் ஊழியர்கள் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட குமரன், பிரபாகரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மேலும், அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர்.
இருவரும் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தனர். இதனால் போலீசார் அவர்களிடம் ‘‘இப்போது அறைக்கு செல்லுங்கள். காலையில் போலீஸ் நிலையத்தில் ஆஜராகிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து செல்லுங்கள்’’ என தெரிவித்துள்ளனர்.
ஆனால் ‘‘இப்போதே மோட்டார்சைக்கிள் வேண்டும்’’ என்று பிரபாகரன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
அதன்படி அங்கு இருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் போலீஸ் நிலையம் அருகே கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் கூலி தொழிலாளர்கள் சமைக்க வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து கொண்டு மீண்டும் போலீஸ் நிலையம் வந்தனர்.
இதையடுத்து போலீஸ் நிலையம் முன் நின்று கொண்டு பிரபாகரன் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரபாகரனிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினார்கள்.
‘‘இனிமேல் இதுபோல் பிரச்சினையில் ஈடுபடக்கூடாது’’ என்று அவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கினார்கள். இதுதொடர்பாக இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.