மாணவியை கேலி செய்ததை தட்டிக் கேட்டவர் மீது தாக்கு; 2 பேர் கைது
மானாமதுரையில் பள்ளி மாணவியை கேலி செய்தது தொடர்பாக தட்டி கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை,
மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியை சேர்ந்தவர் சேகர் மகன் சிவா (வயது 20). இவருடைய நண்பர் அலெக்ஸ் என்பவரின் தங்கை டியுசன் வகுப்புக்கு சென்று விட்டு வரும் போது 5 பேர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது சகோதரரிடம் கூறினாராம்.
அவர் இதுபற்றி சிவாவிடம் கூறியதை தொடர்ந்து, அவர் தனது நண்பர்களுடன் சென்று மாணவியை கேலி செய்தவர்களை தட்டிக் கேட்டு கண்டித்தாராம். அதைத்தொடர்ந்து சிவா ஆதனூர் சாலை சுடுகாடு பகுதியில் தனியாக வந்த போது, சிலர் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கினராம்.
இதில் படுகாயமடைந்த அவர் மானாமதுரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் கிளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த முத்துராமு என்ற எலி (25), காட்டுராஜா, மணிகண்டன், பாம்பு என்ற விக்கி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துராமு என்ற எலி, பாம்பு என்ற விக்கியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.