கஞ்சா விற்ற 8 பேர் கைது 2 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை அருகே கஞ்சா விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
மதுரை மஸ்தான்பட்டி பகுதியில் அண்ணாநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, கஞ்சாவை கடத்தி வந்த ராஜாக்கூரை சேர்ந்த குமார், ராஜேஷ்குமார், வசந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா, ரூ.5 ஆயிரம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இதுபோல், கரிமேடு புதுஜெயில் ரோடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, அந்த பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அழகம்மாள், உதயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முருகானந்தம், சுண்டம்மாள், விஜயலட்சுமி ஆகியோரை கைது செய்து அவர்களின் ஆட்டோ, 2½ கிலோ கஞ்சா, ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.