கஜா புயலால் பாதிப்பு: மீட்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


கஜா புயலால் பாதிப்பு: மீட்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 1:40 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடையும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி பேசுகையில், புயல் பாதித்த பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் அரசால் அமைத்து தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பு சேத விபரங்கள் துல்லியமாக அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ஏற்கனவே 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தற்போது 100 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. குக்கிராமங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளை 100 சதவீதம் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன், தாசில்தார் பரணி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை கூறுகையில், அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசால் செய்து கொடுக்க வேண்டும். அல்லது சொந்த முயற்சியால் அதை நிறைவேற்றித்தர வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நான் செய்ததால்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணியின் போது என்னுடை காரை யாரும் மறிக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 95 சதவீதம் மீட்பு பணிகள் முடிந்து உள்ளது. குறிப்பாக மின்சாரம் 95 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது மீதமுள்ள 5 சதவீதம் பணிகள் 2 அல்லது 3 நாட்களில் முடி வடையும். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னர் தான் நான் சென்னை செல்வேன். கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து புதுக்கோட்டை விரைவாக மீண்டதற்கு அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது தான் காரணம். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story