சேலத்தில் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் குற்ற தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சேலம்,
தமிழக காவல்துறையில் மாவட்ட வாரியாக குற்ற தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன்படி, சேலம் மாநகரம் மற்றும் சேலம் சரகத்திற்கு உட்பட்ட நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உட்கோட்ட அளவில் நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் மீதான நடவடிக்கை மற்றும் குற்ற தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கொலை, ஆதாய கொலை, போக்சோ, பாலியல் பலாத்காரம், தொடர்பான வழக்குகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகளை ஒவ்வொரு துணை போலீஸ் சூப்பிரண்டும் தெரிவிக்க வேண்டும் என கூறி அவர் கூட்டத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் வழக்குகள் குறித்தும், குற்றவாளிகளுக்கு கோர்ட்டு மூலம் தண்டனை பெற்று கொடுத்தது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து டி.ஜி.பி. கேள்வி எழுப்பினார். வரும் காலங்களில் இதுபோன்ற முக்கிய குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தப்பாத வகையில் போலீசாரின் மேல் நடவடிக்கை இருக்க வேண்டும். அதேபோல் குற்ற தடுப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும் என டி.ஜி.பி. அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர், டி.ஐ.ஜி.செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜோர்ஜி ஜார்ஜ்(சேலம்), அருளரசு(நாமக்கல்), பன்டிகங்காதர்(தர்மபுரி), மகேஷ்குமார்(கிருஷ்ணகிரி), சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் தங்கதுரை, ஷியாமளாதேவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story