விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை– ஓரியூர் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விபத்துக்கு வழிவகுக்கும் திருவாடானை –ஓரியூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொண்டி,
திருவாடானை –ஓரியூர் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகஅளவில் இருக்கும். ஓரியூர், புலியூர், வெள்ளையபுரம், பாண்டுகுடி, திருப்புனவாசல், ஆண்டாவூருணி போன்ற ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான மாணவ–மாணவிகள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையில் பல இடங்களில் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். இதேபோல வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையடுத்து சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து சாலையில் மேலும் பள்ளங்கள் ஏற்பட்டுஉள்ளது. இந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் கற்களை மட்டும் குழிகளில் கொட்டியுள்ளனர். இதனால் ஏற்கனவே இருந்த ஆபத்தை விட தற்போது சாலைகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள சரளை கற்கள் விபத்துக்கு வழிவகுத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாண்டுகுடியை சேர்ந்த தந்தை மகன் விபத்துக்குள்ளாகி பலியானார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.