5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - முகுல் வாஸ்னிக் பேட்டி


5 மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - முகுல் வாஸ்னிக் பேட்டி
x
தினத்தந்தி 10 Dec 2018 5:15 AM IST (Updated: 10 Dec 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று முகுல் வாஸ்னிக் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில மேலிட பார்வையாளருமான முகுல் வாஸ்னிக் கலந்து கொண்டு கேக் வெட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், துணை தலைவர்கள் தேவதாஸ், நீல.கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முகுல் வாஸ்னிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளது. அந்த மாநிலங்களில் பிரசாரத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிகமான மக்கள்கூடி வந்து, ஆதரவு தெரிவித்தனர். மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே நாங்களும் மிகவும் நம்பிக்கையாக உள்ளோம். 11–ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் நிச்சயமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். மேகதாது அணை பிரச்சினை இரு மாநிலங்களுக்கு இடையிலானது. மாநில அளவில்தான் பேசி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ராகுல்காந்தி பேரவை சார்பில் அதன் தலைவர் சேகர் தலைமையில் மணக்குள விநாயகர் கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதே போல் முல்லா வீதியில் உள்ள தர்காவிலும், ரெயில்வே நிலையம் எதிரில் உள்ள புனித இருதய ஆண்டவர் பசிலிக்காவிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.


Next Story