கல்லக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை டவுசர் அணிந்த நபர்கள் அட்டகாசம்


கல்லக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகைகள் கொள்ளை டவுசர் அணிந்த நபர்கள் அட்டகாசம்
x
தினத்தந்தி 10 Dec 2018 4:30 AM IST (Updated: 10 Dec 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

கல்லக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில், டவுசர் அணிந்து வந்த நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

கல்லக்குடி,

கல்லக்குடி அருகே புதூர்பாளையம் ஊராட்சி வாண்டராம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆப்ரகாம்(வயது 42). முன்னாள் ராணுவ வீரரான இவர், தற்போது திருவெறும்பூர் பாய்லர் ஆலையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(32). இவர்களுக்கு ஆண்ட்ரியா(7) என்ற மகளும், ஆண்ட்ரோ(4) என்ற மகனும் உள்ளனர். ஆப்ரகாம் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். இதனால் தமிழ்ச்செல்வி கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு, குழந்தைகளுடன் வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினார்.

இந்நிலையில் நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் வீட்டு கதவின் தாழ்ப்பாளை கம்பியால் நெம்பி உடைத்துவிட்டு, வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் ஒரு அறையில் உள்ள பீரோவை உடைத்து தங்க தோடு, மோதிரம் உள்ளிட்ட 3½ பவுன் நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் ஆவணங்கள் இருந்த ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு, தமிழ்ச்செல்வி படுத்திருந்த அறைக்கு சென்றனர். அங்கு தமிழ்ச்செல்வியின் கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.

இதனால் தமிழ்செல்வி திடுக்கிட்டு கண் விழித்தார். அப்போது டவுசர் அணிந்து, தலையில் முண்டாசு கட்டிய நிலையில் 2 பேர் நின்றதை கண்டு அதிர்ச்சியடைந்து திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். மேலும் தாலிச்சங்கிலியை கைகளால் பற்றிக்கொண்டார். இதையடுத்து 2 மர்ம நபர்களும் தாலிச்சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதில் சங்கிலி அறுந்து 4¾ பவுன் கொள்ளையர்கள் கையில் சிக்கியது. ¾ பவுன் சங்கிலி தமிழ்ச்செல்வியிடம் இருந்தது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து நடந்து, வீட்டின் பின்புறம் வழியாக சென்றனர்.

இதற்கிடையே தமிழ்செல்வியின் சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, நடந்த சம்பவத்தை அறிந்து கொள்ளையர்களை பிடிக்க சென்றனர். ஆனால் கொள்ளையர்கள் வயல்வெளி வழியாக தப்பிச்சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற பை மட்டும் அப்பகுதியில் கிடந்தது. அதில் பணம், நகை எதுவும் இல்லாததால் பையை கொள்ளையர்கள் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

கொள்ளை சம்பவம் குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் தமிழ்ச்செல்வி புகார் அளித்தார். அதன்பேரில் லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜசேகர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், இளங்கோவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story