திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது


திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 10:43 PM GMT (Updated: 9 Dec 2018 10:43 PM GMT)

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களை போல வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் பணியாற்றி வருவதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்றனர்.

அங்கு சந்தேகத்திற்கு இடமான 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். அவர்களின் இருப்பிட முகவரி சான்று இருக்கிறதா? என விசாரித்தனர். அது பற்றி அவர்கள் சரிவர பதில் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து நேற்றும் அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் 2 பேரும் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் பாஸ்போர்ட், விசா இன்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்து இருக்கிறார்கள். கடந்த 1½ ஆண்டு காலமாக பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி இருந்து டீலராக வேலை பார்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று சிக்கினர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்கள் விவரம் வருமாறு:

வங்காளதேசத்தை சேர்ந்த சாத்பூர் மாவட்டம், தாலிகட் கிராமத்தை சேர்ந்த முகமதுஹனீப் என்பவரது மகன் அப்துல்ரஜித்(வயது 24), நாராயகோஞ்ச் மாவட்டம், மாஸ்டைர்பஜாரை சேர்ந்த கசிமுல்லா என்பவரது மகன் சோபுஸ்(29) என்பது தெரிய வந்தது. கைதான 2 பேரும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் திருப்பூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

திருப்பூர் மாநகரில் ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்களும், அதை சார்ந்த நிறுவனங்களும் உள்ளன. இதனால் தொழிலாளர்கள் போல வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றவர்களும், வங்காள தேசத்தை சேர்ந்தவர்களும் ஊடுருவி விடுகிறார்கள். பனியன் நிறுவனங்களை சேர்ந்தவர்களும், வீடு வாடகைக்கு கொடுப்பவர்களும் தகுந்த முகவரி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதியுங்கள் என பலமுறை எச்சரிக்கை விடுத்து உள்ளோம். இருப்பினும் இனி இது போன்று எச்சரிக்கைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.Next Story