6–வது நாளாக உண்ணாவிரதம்: காலாப்பட்டு சிறையில் மேலும் 18 கைதிகள் மயக்கம்


6–வது நாளாக உண்ணாவிரதம்: காலாப்பட்டு சிறையில் மேலும் 18 கைதிகள் மயக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2018 11:17 PM GMT (Updated: 10 Dec 2018 11:17 PM GMT)

புதுவை காலாப்பட்டு சிறையில் 6–வது நாளாக உண்ணாவிரதம் இருந்த நிலையில் மேலும் 18 கைதிகள் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 9 பேர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 54 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுடைய குடும்பத்தினரை பார்க்க பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும், தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் இருக்கும் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 5–ந் தேதி இரவு முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று 6–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளில் 18 பேர் நேற்று காலை மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மதன்(33), பார்த்தசாரதி(27), இருசப்பன்(46), நாராயணன்(34), அமலன்(32), சிவசங்கர், சேக் முகமது(35), கந்தவேலு(45), அண்ணாமலை(38) ஆகிய 9 பேர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஏற்கனவே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை தேறிய 7 கைதிகள் மீண்டும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.


Next Story