மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீலை தாக்கியவருக்கு சரமாரி அடி, உதை


மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீலை தாக்கியவருக்கு சரமாரி அடி, உதை
x
தினத்தந்தி 11 Dec 2018 5:45 AM IST (Updated: 11 Dec 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீலை தாக்கியவரை வக்கீல்கள் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மும்பை ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வக்கீல் குணரத்ன சடவர்தே, வழக்கு விசாரணைக்கு பிறகு ஐகோர்ட்டு வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது, ஐகோர்ட்டு முன் திரண்டிருந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை நெருங்கி வந்து ‘ஏக் மராத்தா, லாக் மராத்தா' என கோஷம் போட்டார். மேலும் வக்கீலை திடீரென தாக்கினார்.

உடனே அங்கிருந்த மற்ற வக்கீல்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு உண்டானது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை மீட்டு ஆசாத் மைதான் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில், அவர் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த வைஜனாத் பாட்டீல் என்பது தெரியவந்தது.

மேலும் மராத்தா சமுதாயத்தை சேர்ந்த அவர் இடஒதுக்கீடுக்கு எதிராக மனு தாக்கல் செய்த கோபத்தில் வக்கீல் குணரத்ன சடவர்தேவை தாக்கியதும் தெரியவந்தது.

போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே தன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வக்கீல் குணரத்ன சடவர்தே கோர்ட்டு அறைக்கு சென்று வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் முறையிட்டார்.

அப்போது, கடந்த ஒரு வாரமாகவே தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பல்வேறு மிரட்டல் போன் அழைப்புகள் வருவதாகவும், மர்ம நபர்கள் 2 பேர் எப்போதும் தன்னை பின் தொடர்வதாகவும் கூறினார்.

மேலும் இதுகுறித்து தான் போலீசாரிடம் புகார் கடிதம் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீ்திபதிகள் தேவைப்பட்டால் வக்கீலுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அரசின் அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.

Next Story