வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்: சப்–இன்ஸ்பெக்டருக்கு 7 ஆண்டு சிறை


வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்: சப்–இன்ஸ்பெக்டருக்கு 7 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 12 Dec 2018 4:15 AM IST (Updated: 12 Dec 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

திருவள்ளூர்,

சென்னை திருமுல்லைவாயல் பெரியார் நகர் வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் துரைசாமி. இவர் சென்னை ஐ.சி.எப்.ல் டெக்னீசியனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் துரைசாமி வீட்டின் கழிவு நீர் குழாய் உடைந்து கழிவுநீரானது வடிவேலுவின் வீட்டு வாசலில் ஓடியுள்ளது. இதையறிந்த வடிவேலு ஏன் என் வீட்டு வாசலில் உன் வீட்டு கழிவுநீரை விடுகிறாய் என தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வடிவேலு திருமுல்லைவாயல் போலீசில் துரைசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டேன்லி ஜோன்ஸ் (47) என்பவர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை செய்வதாக கூறினார். பின்னர் அவர் துரைசாமியை அழைத்து உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க தனக்கு லஞ்சமாக ரூ.10 ஆயிரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி இது குறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி துரைசாமி கடந்த 3–8–2010 அன்று சப்–இன்ஸ்பெக்டர் கேட்ட லஞ்சபணம் ரூ.10 ஆயிரத்தில் ரசாயன பவுடர் தடவி அதனை திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றார். அப்போது அங்கு இருந்த சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டேன்லி ஜோன்சிடம் ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார் ஸ்டேன்லி ஜோன்சை கையும் களவுமாக சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து மாவட்ட நீதிபதி டி.வி.மணி நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்டேன்லி ஜோன்சுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அமுதா வாதாடினார்.


Next Story