‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில், தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டம்
‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தை தடை செய்யக்கோரி மதுரையில் ஒரு தியேட்டர் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற படம் கடந்த வாரம் வெளியாகியது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சுவரொட்டிகள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த படத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த சங்கத்தை சேர்ந்த பெண்கள் நேற்று காலை திடீரென்று மதுரை காளவாசல் பகுதியில், படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர் முன்பு கூடினார்கள். மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுத்தாய் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த படத்தை தடை செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
இதைதொடர்ந்து பெண்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். பின்பு அவர்கள் தியேட்டர் வாசல் முன்பு அமர்ந்து, படத்தை தடை செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் தியேட்டரில் நேற்று காலை நேர காட்சி ரத்து செய்யப்பட்டது.
தகவல் அறிந்ததும் கரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாதர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.