தற்கொலை வழக்கில் திருப்பம் : நகைக்காக கடலில் தள்ளி வாலிபர் கொலை


தற்கொலை வழக்கில் திருப்பம் : நகைக்காக கடலில் தள்ளி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 12 Dec 2018 2:45 AM IST (Updated: 12 Dec 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரை நகைக்காக கடலில் தள்ளி கொலை செய்த நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை, 

மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜூ கெய்க்வாட் (வயது34). மாநகராட்சி துப்புரவு தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதற்கிடையே ராஜூ கெய்க்வாட் அன்று இரவு மது குடித்துவிட்டு செம்பூரில் இருந்து வாஷி பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும், இதில், திடீரென அவர் பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அவரது பெற்றோரிடம் அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் வாஷி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை தேடிவந்தனர். இதில் கடந்த 7-ந் தேதி மஜித் பந்தர் கடல் பகுதியில் ராஜூ கெய்க்வாட்டின் உடல் மீட்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வாஷி போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வாஷி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை கோவண்டி போலீசாருக்கு மாற்றினர்.

இதைத்தொடர்ந்து கோவண்டி போலீசார் ராஜூ கெய்க்வாட்டின் நண்பர்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்காக அவர்கள் வாலிபரை வாஷி பாலத்தில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று மதுகுடித்த பின்னர் வாலிபரின் நண்பர்கள் அவர், அணிந்திருந்த தங்கச்சங்கிலி, தங்க கடுக்கன் ஆகியவற்றை பறித்து உள்ளனர். அப்போது அவர் போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அவரை வாஷி பாலத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கடலில் தள்ளி கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து போலீசார் இந்த கொலையில் தொடர்புடைய அவரது நண்பர்களான அவினாஷ் (26), கிருஷ்ணா (19) மற்றும் 16 வயது வாலிபரை கைது செய்தனர்.

Next Story