புதிதாக 1,715 ஆசிரியர்கள் நியமனம்: 1-ம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை தொடங்க நடவடிக்கை - சட்டசபையில் குமாரசாமி தகவல்


புதிதாக 1,715 ஆசிரியர்கள் நியமனம்: 1-ம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை தொடங்க நடவடிக்கை - சட்டசபையில் குமாரசாமி தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:35 AM IST (Updated: 12 Dec 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் புதிதாக 1,715 ஆங்கில ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்தார்.

பெங்களூரு,

பெலகாவியில் நேற்று தொடங்கிய கர்நாடக சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர் உமாநாத் கோட்டியான், அரசு பள்ளிகளில் ஆங்கில மொழி கற்பித்தல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலளிக்கையில் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பில் இருந்து ஆங்கில வழி கல்வியை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, ஆங்கில வழி வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்படும். இதற்காக ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். ஆங்கில வழி கல்விக்கு தேவையான பாடப்புத்தகங்கள், தேவையான கல்வி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

நடப்பாண்டில் புதிதாக 1,715 ஆங்கில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

கர்நாடகத்தில் அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் கன்னடம் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் நவீன தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்துகிறது.

4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்புகளில் கணிதம் கற்பிக்கப்படுகிறது. இதற்காக கணித உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் குழந்தைகளின் வருகையை அதிகரிக்க இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, சைக்கிள், மதிய உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு குமாரசாமி கூறினார்.



Next Story