அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Dec 2018 3:45 AM IST (Updated: 13 Dec 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூரில் பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் 20 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதியை சேர்ந்தவர் பற்குணன் (வயது 52). மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும், இவர் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராகவும் உள்ளார். இவருடைய மனைவி யசோதா (45). இவர் ஒசூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணம் ஆகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் யசோதா ஒரு நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த யசோதா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் இருந்த அறை வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த அறையின் கதவை கணவர் பற்குணன் தட்டினார். இதனால் யசோதா உடனே கதவை திறந்தார். அப்போது வெளியே வந்த பற்குணன் தூங்கிக்கொண்டு இருந்த தன்னை யாரோ அறைக்குள் வைத்து பூட்டிவிட்டதாக கூறினார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் மற்றொரு அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதில் இருந்த 20 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்லி கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் பற்குணன் தூங்கிய அறைக்கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி பற்குணன் உடனே, அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூங்கிக்கொண்டு இருந்த வீட்டின் உரிமையாளரை அறைக்குள் வைத்து பூட்டிவிட்டு மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story