அருப்புக்கோட்டை பரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் மனைவி – கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


அருப்புக்கோட்டை பரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் மனைவி – கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 13 Dec 2018 4:30 AM IST (Updated: 13 Dec 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டையில் பரோட்டா மாஸ்டரை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை நோட்டக்கார தெருவைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பரமசிவம் (வயது 48). இவரது மனைவி பேச்சியம்மாள் (40). இவர்களுக்கு முத்துகிருஷ்ணன் (16), ஈஸ்வரமூர்த்தி (14) ஆகிய 2 மகன்கள் உண்டு.

பரமசிவம் அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பேச்சியம்மாள் சங்கரலிங்க நாடார் தெருவில் உள்ள ராஜதிரவியம் என்பவரது ரைஸ் மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார். அப்போது ராஜதிரவியத்தின் மகன் சுரேஷ்குமாருக்கும் (28), பேச்சியம்மாளுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து தெரிய வந்ததும் பரமசிவம் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும் தடுத்துள்ளார்.

இந்த நிலையில் பரமசிவம் இல்லாத நேரங்களில் அவரது வீட்டுக்கு வந்த சுரேஷ்குமார் பேச்சியம்மாளுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்ததும் பரமசிவம் தனது மனைவியை தாக்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் பரமசிவத்தை கொலை செய்ய சுரேஷ்குமாரும், பேச்சியம்மாளும் முடிவு செய்தனர். இதையடுத்து சுரேஷ்குமார் தனது மில்லில் வேலை செய்யும் மணிநகரைச் சேர்ந்த முருகேசபாண்டியன் (35) என்பவருடன் கடந்த 17.2.2009 அன்று இரவு பரமசிவத்தின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் பேச்சியம்மாளுடன் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த பரமசிவத்தின் வாயில் வி‌ஷத்தை ஊற்றி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இது குறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பேச்சியம்மாள், சுரேஷ்குமார், முருகேசபாண்டியன் ஆகியோரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆ.முத்துசாரதா, அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.


Next Story