வருமான வரி செலுத்துபவர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறி மோசடி


வருமான வரி செலுத்துபவர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறி மோசடி
x
தினத்தந்தி 15 Dec 2018 4:30 AM IST (Updated: 15 Dec 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

வருமான வரி செலுத்து பவர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றும் மோசடி கும்பல் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை,

வங்கிகளில் நெட்பேங்கிங் வைத்திருப்பவர்களின் பணத்தை அபகரிப்பதற்கும், போலி ஏ.டி.எம். கார்டு களை தயாரித்து மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கும் மோசடி ஆசாமிகள் பல்வேறு வழிமுறைகளை கண்டுபிடித்து கைவரிசை காட்டி வருகிறார்கள். நெட்பேங்கிங் வைத்திருப்பவர்களுக்கு ஏதாவது புதிய இ-மெயில் வரும். அதை திறந்த உடன் அதில் உள்ள வைரஸ், வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் இ-மெயிலில் சேர்ந்து விடும்.

பின்னர் நெட்பேங்கிங் வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை ஆன்லைன் மூலம் மாற்றும் போது யூசர் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு, டிரான்ஸ்சேக்சன் பாஸ்வேர்டு ஆகிய விவரங்கள் வைரஸ் மூலம் மோசடி ஆசாமிகளின் கணினி அல்லது மடிகணினிக்கு சென்று கொண்டே இருக்கும். அதை வைத்து மோசடி ஆசாமிகள் மற்றவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை கறந்து விடுகிறார்கள்.

அடுத்து ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு மோசடி ஆசாமிகள் போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண், பின் நம்பர் ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டு அதன் மூலம் போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து மற்றவர்களின் கணக்கில் உள்ள பணத்தை எடுத்து விடுகிறார்கள்.

மேலும் ஏ.டி.எம். மையங்களில் ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ கேமரா ஆகியவற்றை ரகசியமாக வைத்து அதன் மூலம் வங்கியில் பணம் எடுப்பவர்களின் ஏ.டி.எம்.கார்டுகளின் தகவல்களை திருடி போலி கார்டுகள் தயாரித்து பணத்தை மோசடி ஆசாமிகள் எடுத்து வந்தனர்.

தற்போது வருமானவரி செலுத்துபவர்களுக்கு மோசடி ஆசாமிகள் இ-மெயில் அனுப்பி புதிய முறையில் ஏமாற்றும் வேலையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதற்காக மோசடி ஆசாமிகள் வருமானவரித் துறையில் இருந்து அனுப்புவது போல போலியாக இ-மெயில் அனுப்பி வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளனர். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உங்களுக்கு வருமானவரித்துறை பிடித்தம் செய்த பணம் (ரீபைண்ட்) திருப்பி செலுத்த வேண்டி உள்ளது. அதற்காக உங்கள் ஏ.டி.எம். கார்டு எண், சி.வி.வி. எண் மற்றும் பின் நம்பர் ஆகியவற்றை இ-மெயிலில் அனுப்புங்கள் என்று மோசடி ஆசாமிகள் தகவல் அனுப்புகிறார்கள். அது போலியானது ஆகும். வருமானவரித்துறை எப்போதும் மற்றவர்களின் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், பின் நம்பர் ஆகியவற்றை கேட்பதில்லை.

வருமானவரி துறை செலுத்துபவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்ப அனுப்ப வேண்டும் என்றால் ஏற்கனவே அவர்களின் வங்கி கணக்கு வருமானவரித்துறையிடம் இருக்கும். அதில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் செலுத்தப்பட்டு விடும். யாரிடமும் எந்த தகவலையும் வருமானவரித் துறை ஒரு போதும் கேட்பதில்லை. எனவே இதுபோன்ற போலியான இ-மெயில் வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம். இதுபற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மோசடி ஆசாமிகள் போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிப்பதை தடுப்பதற்காக தான் ‘சிப்’ உள்ள ஏ.டி.எம். கார்டுகள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. அது போன்ற கார்டுகளை வருகிற 31-ந் தேதிக்குள் பெற்றுக் கொள்ளுமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தி உள்ளன.

மோசடி ஆசாமிகள் பலவழிகளில் மற்றவர்களின் பணத்தை திருடி வந்தனர். அதில் தற்போது வருமானவரித்துறையில் இருந்து தகவல் அனுப்புவது போல் போலியான தகவல் அனுப்பி ஏமாற்ற தொடங்கி உள்ளனர். இது வரி செலுத்துபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story