கோவையில் துணிகரம் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து நகை திருட்டு
கோவையில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து நகை திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
துடியலூர்,
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 79). அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்து, தான் கோவை மாநகராட்சி அதிகாரி என்றும் உங்கள் வீட்டு தண்ணீர் மற்றும் வீட்டு வரி கட்டணம் வசூலிக்கப்பட்ட ரசீதுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி, வரி கட்டிய ஆவணங்களை அவரிடம் கொடுத்தனர். அந்த வாலிபர் அவற்றை ஆய்வு செய்வதுபோல் பார்த்து விட்டு, மாடியை பார்க்க வேண்டும் என்றார்.
மாடியில் எங்கள் இருவராலும் ஏற முடியாது. நீங்கள் சென்று ஆய்வு செய்யுங்கள் என்று வெங்கடேசன் கூறினார். இதனால் அந்த வாலிபர் மட்டும் மாடிக்கு சென்று, சிறிது நேரம் கழித்து கீழே வந்தார். பின்னர் அனைத்தும் சரியாக உள்ளது என்று கூறி, ஆவணங்களை திரும்ப கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் வெங்கடேசன் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்து இருந்த 2 பவுன் நகை திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், துடியலூர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் மாநகராட்சி அதிகாரி போல் நடித்து மர்ம ஆசாமி நகையை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் மாநகராட்சி ஊழியர்கள் வந்தால் அவர்களின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனர்.