புஞ்சைபுளியம்பட்டி வழியாக லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


புஞ்சைபுளியம்பட்டி வழியாக லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Dec 2018 11:27 PM GMT (Updated: 15 Dec 2018 11:27 PM GMT)

புஞ்சைபுளியம்பட்டி வழியாக லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி,

கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வழியாக புகையிலை பொருட்கள் லாரியில் கடத்தப்படுவதாக சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையாவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சத்தியமங்கலம்- கோவை ரோட்டில் விண்ணப்பள்ளி புதுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

போலீசாரை கண்டதும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர். அப்போது லாரியில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 40 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை கடத்தியவர்கள் யார்? எங்கு கொண்டு செல்வதற்காக புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story