கடந்த ஆண்டைவிட விபத்துகள் குறைந்தன - போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தகவல்


கடந்த ஆண்டைவிட விபத்துகள் குறைந்தன - போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2018 5:04 AM IST (Updated: 16 Dec 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துகள் குறைந்துள்ளன என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சாலை விபத்துகளில் 566 பேர் இறந்து உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 322 பேர் சாலை விபத்துகளில் இறந்து உள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைந்து உள்ளது. மேலும், விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி ஈரோடு நகர உட்கோட்டத்தில் 14 இடங்களும், பவானி உட்கோட்டத்தில் 27 இடங்களும், கோபி உட்கோட்டத்தில் 6 இடங்களும், சத்தியமங்கலம் உட்கோட்டத்தில் 14 இடங்களும், ஈரோடு ஊரக உட்கோட்டத்தில் 10 இடங்களும் அதிகமாக விபத்து ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், டிவைடர்கள், ஒளிரும் விளக்குகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. போலீஸ் துறை உயர் அதிகாரிகள், தொழில்நுட்ப பிரிவு நிபுணர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மாநில நெடுஞ்சாலை துறையினர், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோரை ஒருங்கிணைத்து ஈரோடு மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியுள்ளார்.


Next Story