பைகுல்லாவில் ரூ.21 லட்சம் போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்கள் கைது துப்பாக்கி பறிமுதல்


பைகுல்லாவில் ரூ.21 லட்சம் போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்கள் கைது துப்பாக்கி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Dec 2018 11:32 PM GMT (Updated: 16 Dec 2018 11:32 PM GMT)

பைகுல்லாவில் ரூ.21 லட்சம் போதைப்பொருளுடன் 7 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தியை பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மும்பை பைகுல்லா போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் நிர்மல் பார்க், அம்பேத்கர் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் நைஜீரியர்கள் கும்பலாக நின்று கொண்டு இருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் விசாரிக்க அருகில் சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் அவர்களை நோக்கி 3 ரவுண்டு சுட்டனர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கு இருந்து சின்ஞ்போக்லி ரெயில்நிலையம் நோக்கி ஓடியது. போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். இதில் போலீசார் நைஜீரிய கும்பலை சேர்ந்த 7 பேரை பிடித்தனர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 550 கிராம் மெப்ட்ரோன், 110 கிராம் பிரவுன் சுகர், 11 கிராம் கோகைன் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கி, கத்தி, 11 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும். முன்னதாக நைஜீரிய கும்பலை பிடிக்கும் போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 போலீஸ்காரர்கள் மற்றும் 3 நைஜீரியர்கள் காயமடைந்தனர்.

Next Story