வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 11:36 PM GMT (Updated: 16 Dec 2018 11:36 PM GMT)

வெளிநாட்டுக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற 3 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு சக்காலாவில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் கடந்த 2014-ம் ஆண்டு உணவு பொருட்கள் என்ற பெயரில் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த பார்சலில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது, அந்த பார்சலில் உணவுப் பொருட்களுக்கு மத்தியில் 5 கிலோ எடை கொண்ட கேட்டமைன் ஹைட்ரோ குளோரைடு என்ற போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அந்த போதைப்பொருளை காந்திவிலி பகுதியை சேர்ந்த கிரன் ஜங்கலே, பிரவின் குமார், அலிசான் சர்மா ஆகிய 3 பேர் தான் லண்டனுக்கு கடத்துவதற்காக அந்த பார்சலை பதிவு செய்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நிறைவில், 3 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் 3 பேருக்கும் நீதிபதி தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story