தாளவாடி அருகே விவசாயியை யானை மிதித்து கொன்றது
தாளவாடி அருகே காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதிக்கு உள்பட்ட மாதள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரபுசாமி (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி ரத்தினம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பிரபுசாமிக்கு சொந்தமான 2 ஏக்கர் தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. தோட்டத்தில் அவர் மக்காச்சோளம் மற்றும் ராகி பயிரிட்டு உள்ளார். இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும் தங்களுடைய தோட்டங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளார்கள்.
இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை மற்றும் காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் அனைவரும் இரவு நேரங்களில் அவரவர் தோட்டங்களில் காவல் காத்து வருகிறார்கள்.
வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பிரபுசாமி காவலுக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று அவருடைய தோட்டத்துக்குள் புகுந்தது. காவலுக்கு சென்ற அவர் தோட்டத்தில் யானை நிற்பதை கவனிக்கவில்லை. அருகே சென்றதும் யானையை கவனித்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் யானை பிரபுசாமியை பிடித்து துதிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.
பின்னர் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானை மிதித்ததில் வலிதாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள தோட்டத்தில் காவலுக்கு இருந்தவர்கள் பிரபுசாமியின் தோட்டத்தை நோக்கி ஓடி வந்து பார்த்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பிரபுசாமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் பிரபுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இறந்த பிரபுசாமியின் குடும்பத்தினரை தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும், பிரபுசாமி மனைவியிடம் ரூ.50 ஆயிரம் இழப்பீடு நிதிஉதவி வழங்கப்பட்டது. வனவிலங்குகள் தாக்கி யாரேனும் இறந்தால், அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும். அதனால் பிரபுசாமியின் குடும்பத்தினருக்கு மீதமுள்ள தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறினார்கள்.
காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.