போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு


போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:15 PM GMT (Updated: 17 Dec 2018 8:22 PM GMT)

திருச்சி அருகே போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி அருகே சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 10-ந்தேதி இரவு பணியில் இருந்த 32 வயது பெண் போலீசுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் (வயது 54) முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணியில் இருந்த போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தன்னிடம் தவறாக நடந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்கிடம் பெண் போலீஸ் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியனை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அவர் ஆய்வு செய்தார். இதில் போலீஸ் நிலையத்தில் தொலைபேசி இருக்கும் மேஜையின் அருகே நாற்காலியில் பெண் போலீஸ் பணியில் இருந்த போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் உள்ளே வருவதும், அவர் பெண் போலீசின் முகத்தில் இறுக்கி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இந்த காட்சியின் போது பெண் போலீஸ் கையில் செல்போனை பார்த்தபடி இருக்கிறார். அந்த நேரத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஒருவர் உள்ளே வருவதும், அப்போது 2 பேரும் விலகி நிற்பதும் பதிவாகி இருந்தது. மொத்தம் 2 நிமிடம் 50 வினாடிகள் இந்த வீடியோ காட்சி பதிவாகி உள்ளது.

போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பதிவிறக்கம் செய்து வெளியில் கசிய விட்டது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வீடியோவை வெளியில் பரப்பியவர் யார்? என்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த சம்பவத்திற்கு பின் பெண் போலீஸ் மருத்துவ விடுப்பில் சென்றார். பாலியல் ரீதியான சம்பவம் என்பதால் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவிட்டார். அதன்படி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சம்பந்தப்பட்ட பெண் போலீசிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் சமர்ப்பித்தார்.

இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் வைத்து பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்தது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில்தான் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது. போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது அதே போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

Next Story