பெய்ட்டி புயல் கரையை கடந்தது: ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை
பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது ஏனாமில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புதுச்சேரி,
வங்கக்கடலில் உருவான பெய்ட்டி புயல் நேற்று பிற்பகலில் ஆந்திராவில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான ஏனாமில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதன் காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தொட்டிகள் காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெயர்ந்து விழுந்தன. மரங்களும் வேரோடு சாய்ந்தன. வாழைத்தோட்டங்கள் அடியோடு நாசமானது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்ததும் நிவாரண பணிகள் தொடங்கின. வருவாய், பொதுப்பணி, காவல், தீயணைப்பு என பல்வேறு அரசுத் துறைகளை சேர்ந்தவர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். ரோடுகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி ஏனாமில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கவிட்டுள்ளார். சேதம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
புதுவை துறைமுகத்தில் 3–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தநிலையில் புயல் கரையை கடந்ததை யொட்டி நேற்று 2–ம் எண்ணாக குறைக்கப்பட்டது.