டாக்டர்கள் சங்கத்தினருடனான பேச்சுவார்த்தை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


டாக்டர்கள் சங்கத்தினருடனான பேச்சுவார்த்தை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2018 4:56 AM IST (Updated: 18 Dec 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர்கள் சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த முகமது யூனிஸ்ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 8–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளனர். எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு டாக்டர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, டாக்டர்களின் கோரிக்கை தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி எப்போது தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும், அந்த அறிக்கையின் அடிப்படையில் டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவு காலம் ஆகும் என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சுகாதாரத்துறை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, “கடந்த செப்டம்பர் மாதம் டாக்டர்கள் சங்கத்தினருடன் சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது டாக்டர்கள் சங்கத்தினரின் கோரிக்கைகள் விரிவாக கேட்டு அறியப்பட்டது. அதன்பின் அக்டோபர் மாதம் இந்த குழு மீண்டும் கூடி விவாதித்தது. அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின் தான் டாக்டர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழு சட்டப்பூர்வமானது இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது“ என்றார்.

விசாரணை முடிவில், 18.9.2018 மற்றும் அதனைத் தொடர்ந்து டாக்டர் சங்கங்கள், சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குனர்கள் குழு நடத்திய கூட்ட விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஜனவரி 7–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story