“என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிடுங்கள்”: இளம்பெண்ணின் தாயார் நீதிபதிக்கு கடிதம், மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு


“என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய உத்தரவிடுங்கள்”: இளம்பெண்ணின் தாயார் நீதிபதிக்கு கடிதம், மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 19 Dec 2018 5:00 AM IST (Updated: 19 Dec 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

“என் மகளை பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும்“ என்று இளம்பெண்ணின் தாயார் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். அதன் அடிப்படையில் மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

மதுரை,

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருந்ததாவது:–

எனது கணவர் இறந்துவிட்டார். ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் ஜவுளிக்கடையில் 3 வருடங்களாக பணிபுரிந்து வந்தாள். இந்தநிலையில் கடை உரிமையாளரின் நண்பர் விருந்து வைப்பதாக கட்டாயப்படுத்தி எனது மகளை அழைத்து சென்றார். அன்று மதியம் 3 மணிக்கு வீடு திரும்பிய எனது மகள் மயக்க நிலையில் இருந்தாள். அவளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்த போது அவரை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதுபற்றி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். அதன்பேரில் சின்னப்பா என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆனால் மற்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கைகள் இல்லை. எனது மகள் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிற குற்றவாளிகள் பணபலம் மிக்கவர்கள். எனவே எனது மகளுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் பலாத்கார சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து தண்டிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் உருக்கமாக கூறி இருந்தார்.

இந்த பரபரப்பு கடிதத்தின் அடிப்படையில், இளம்பெண் பலாத்காரத்துக்கு ஆளான சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கில் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story