கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Dec 2018 11:00 PM GMT (Updated: 20 Dec 2018 8:58 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் தலைவர் நாகமணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் அழகிரிசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயேந்திரன், துணை செயலாளர் செந்தாமரை செல்வி, பொருளாளர் செந்தில்குமார் உள்பட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்பபடுத்த வேண்டும். கூடுதலாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும். அடங்கல், பிறப்பு-இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றை கணினியில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு அதிகவேக இணையதள சேவையுடன் கூடிய கணினி வழங்க வேண்டும்.

உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களிலும் கிராம நிர்வாக அதிகாரியின் பரிந்துரையை கட்டாயமாக்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Next Story