கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 9:13 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் கிராம நிர்வாக அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமாக வழங்க வேண்டும், பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் கோரிய அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், மின் வசதி, கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகங்களை அமைக்க வேண்டும், மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்று பேசினார். பொருளாளர் நடேசன் முன்னிலை வகித்தார். உண்ணாவிரத போராட்டத்தை மாநில பொருளாளர் அழகிரிசாமி தொடங்கி வைத்து கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

அவர் பேசுகையில், “பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மாவட்ட மாறுதல் கோரிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும், கூடுதல் பணி செய்யும் காலம் முழுமைக்கும் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்த கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் பெரியண்ணன், அமைப்பு செயலாளர் சண்முகவடிவு உள்பட திரளான கிராம நிர்வாக அதிகாரிகள் பங்கேற்றனர். போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 265 கிராம நிர்வாக அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக இருப்பிட சான்று, முகவரி சான்று, சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகம் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

Next Story