தேனி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் பணிகள் முடங்கின


தேனி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் பணிகள் முடங்கின
x
தினத்தந்தி 21 Dec 2018 10:15 PM GMT (Updated: 2018-12-21T23:16:34+05:30)

தேனி மாவட்டத்தில் வங்கி அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் முடங்கின.

தேனி,

சம்பள உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் மொத்தம் 126 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன.

இவற்றில் மொத்தம் 450 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 432 பேர் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், அவர்கள் பணிக்கு வரவில்லை.

வங்கிக்கு எழுத்தர், காசாளர், உதவியாளர்கள் போன்ற ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்து இருந்த னர். இருப்பினும் சேவைகள் எதுவும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

வங்கி அதிகாரிகள் கையில் தான் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவி, ரகசிய சாவி போன்றவை இருக்கும். அதிகாரிகள் வந்தால் தான் பணப்பரிமாற்றம் மற்றும் காசோலை பரிவர்த்தனை நடக்கும்.

அதிகாரிகள் இல்லாமல் ஊழியர்கள் மட்டுமே இருந்ததால் பணிகள் நடக்கவில்லை. தேனி நகர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வியாபாரிகள், பொதுமக்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பணம் செலுத்தவும், பணம் எடுக்கவும் ஏ.டி.எம். மையங்களில் உள்ள எந்திரங்களை பயன்படுத்தினர்.

அதிலும் குறைந்த அளவே பணம் எடுக்க முடிந்தது. சில இடங்களில் பணம் செலுத்தும் எந்திரங்கள் செயல்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் பரிதவித்தனர். 

Next Story