கந்திகுப்பம் அருகே லாரி - வேன் மோதல்; 2 வியாபாரிகள் பலி
கந்திகுப்பம் அருகே லாரி - வேன் மோதிய விபத்தில் ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த 2 வியாபாரிகள் பலியானார்கள்.
பர்கூர்,
ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் சபீர்பாய் (வயது 52), நூர்பாய் (50). மளிகை வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் நேற்று மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஆம்னி வேனில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அங்கு மளிகை பொருட்களை வாங்கி கொண்டு வேனில் மீண்டும் குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்ற வேன் கந்திகுப்பம் அருகே பெரிய மட்டாரப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த நிலையில் லாரியும், ஆம்னி வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் வேனில் இருந்த சபீர்பாய், நூர்பாய் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்துக்குள்ளான லாரி மற்றும் வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக கந்திகுப்பம் அருகே பெரியமட்டாரப்பள்ளி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story