சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது


சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 3:15 AM IST (Updated: 22 Dec 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி ராஜலட்சுமி (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென்று ராஜலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து ராஜலட்சுமி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சேலம் எருமாபாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேலும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (27), பனங்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்த கார்த்திக் (28) என்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் ராஜலட்சுமியிடம் தங்கசங்கிலி பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதேபோல் சேலத்தில் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக திருவாக்கவுண்டனூரை சேர்ந்த பிரகாஷ் (33), சேலம் காட்டுவலசு பகுதியை சேர்ந்த சரவணன் (27) ஆகியோரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story