வனவிலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மயில், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முறையீட்டு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி கோவை கலெக்டர் அலுவலகத்தில் முறையீட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-
பெரியசாமி (தீத்திபாளையம்):- கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4,500 ஹெக்டேர் பரப்பளவில் சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது. தற்போது அறுவடை செய்யப்பட்ட சின்னவெங்காயம் போதிய விலை இல்லாததால் விற்பனை செய்யாமல் இருப்பு வைத்து உள்ளோம். ஆனால் வியாபாரிகள் இருப்பு வைத்துள்ள சின்ன வெங்காயம் போதிய தரம் இல்லை என்று கூறி விலையை குறைத்து வழங்குகின்றனர். எனவே அரசே சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
சு.பழனிசாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்):- கோவை மதுக்கரை, மத்வராயபுரம், மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளும் மயில்கள், கிளிகள் ஆகியவையும் விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதன்காரணமாக விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே வனவிலங்குகளால் சேதமடையும் பயிர்களுக்கு தற்போது அரசு வழங்கும் இழப்பீடு தொகை போதாது. எனவே கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த அதனை சுட்டுக்கொல்லலாம் என்று அரசு தெரிவித்தது. இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்று தெரியவில்லை. கிணத்துக்கடவு பகுதியில் காற்றாலை அமைக்கப்பட்டால் நீர்நிலைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விவசாய நிலங்களில் காற்றாலை அமைக்கக்கூடாது. இதேபோல் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் சாலையோரங்களில் கேபிள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும்.
கந்தசாமி (கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்):- கோவை பகுதியில் அட்டகாசம் செய்த காட்டு யானை விநாயகனை பிடித்த வனத்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும்.
பட்டீஸ்வரன் (தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்):- கோவையில் நெல் பயிரிட்ட இடங்களில் விரைவில் அறுவடை தொடங்கப்பட உள்ளது. இதனால் ஒடையகுளம் குளப்பத்து பாசன பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. முன்பு சிட்டா மட்டுமே வாங்கிக்கொண்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வேறு சான்றிதழும் அதிகாரிகள் கேட்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் சான்றிதழ்களை பெற முடியாத நிலை உள்ளது. எனவே சிட்டாவை பெற்றுக்கொண்டு நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதுதவிர ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.
Related Tags :
Next Story