கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய தபால் ஊழியர்கள் சங்கு ஊதி போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய தபால் ஊழியர்கள் சங்கு ஊதி போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2018 10:30 PM GMT (Updated: 21 Dec 2018 10:41 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய தபால் ஊழியர்கள் சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.

மதுரை, 

அகில இந்திய கிராமிய தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18-ந் தேதி முதல் நடந்து வரும் இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் நேற்று அரை நிர்வாணம் மற்றும் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் போது, தபால் அலுவலகங்களின் முன்பு கிராமிய தபால் ஊழியர் சங்கத்தினர் அரை நிர்வாணத்துடனும், சங்கு ஊதியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

உதவித்தொகை

அப்போது, கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். பணிமுதிர்வுக்கொடை தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பணி மாறுதல் விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். ஆண்டுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். 180 நாட்கள் விடுமுறையை ஓய்வு பெறும்போது பணமாக பெறுவதற்கு உத்தரவிடவேண்டும்.

குழந்தைகளின் கல்விக்கான வருடாந்திர உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். கிளை தபால் அலுவலர்களுக்கான அலவன்சை ரூ.1,600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து கிராமிய தபால் ஊழியர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக மாற்றி முழுநேர அரசு ஊழியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தை சங்கங்களின் செயலாளர்கள் ஆறுமுகம், மாயாண்டி ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

Next Story