12 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு: போலி மது வழக்கில் 350 பேர் கைது - தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்


12 சிறப்பு தனிப்படைகள் அமைப்பு: போலி மது வழக்கில் 350 பேர் கைது - தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தகவல்
x
தினத்தந்தி 21 Dec 2018 11:28 PM GMT (Updated: 21 Dec 2018 11:28 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் போலி மது விற்பனை, தயாரிப்பை தடுக்க 12 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை போலி மது வழக்கில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட போலீசாருக்கான நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்க விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் வரவேற்றார். முகாமை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிப்பு தொடர்பான மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டதால் இந்த பயிற்சி முகாம் தாமதமாக நடைபெறுகிறது. போலீசாருக்கு இந்த பயிற்சி அவசியம் தேவை. காரணம் இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதாலும், குடும்பத்தை சரிவர கவனிக்காததாலும் போலீசாருக்கு 2 விதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை போக்கும் வகையில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஒரு பிரச்சினை என்றால் அதை சரியாக புரிந்து கொண்டாலே 50 சதவீத பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் டி.ஐ.ஜி. லோக நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் போலீசார், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மன நிறைவான வாழ்வு வாழ்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1,700 போலீசாருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. 35 பேர் வீதம் 1 ஆண்டுக்கு இந்த பயிற்சி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை போலீசாரின் குடும்பத்தினருக்கும் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

இதன் மூலம் மன அழுத்தம் குறைந்து மன நிறைவாக போலீசார் பணிபுரிய ஏதுவாக அமையும். கஜா புயல் பாதிப்பு தொடர்பான மீட்பு பணிகளில் போலீசார் ஈடுபட்ட நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததும், போலியாக மதுபானம் தயாரித்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. வல்லம், கும்பகோணம் பகுதியில் போலி மதுபானம் தயாரிப்பு நிலையிலேயே கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மது விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 350 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் போலி மதுபானம் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுக்க 12 சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழன், மன்னர் சரபோஜி கல்லூரி பேராசிரியர் சித்ரவேல் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.


Next Story