கஜா புயலால் சேதமடைந்த திருமக்கோட்டை நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


கஜா புயலால் சேதமடைந்த திருமக்கோட்டை நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Dec 2018 10:45 PM GMT (Updated: 22 Dec 2018 8:29 PM GMT)

கஜா புயலால் சேதமடைந்த திருமக்கோட்டை நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமக்கோட்டை,

கடந்த மாதம்(நவம்பர்) 16-ந்தேதி வீசிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும், வீடுகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் கஜா புயலால் நேரடி கொள்முதல் நிலைய கட்டிடம் சேதமடைந்தது. புயல் வீசி 1 மாதத்துக்கு மேலாகியும் இதுவரை நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை சீரமைக்கவில்லை.

தற்போது ஆழ்குழாய் கிணற்று தண்ணீர் மூலம் சாகுபடி செய்த விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆனால் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இடம் இல்லாததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story