திருச்சி விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் சிக்கினர்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 25 Dec 2018 5:00 AM IST (Updated: 25 Dec 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் கடத்தல் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பெண் உள்பட 2 பேர் சிக்கினர்.

செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சிங்கப்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னைக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அவ்வப்போது தங்களது உடைமைகளில் மறைத்து தங்கம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் மற்றும் அரியவகை உயிரினங்கள் கடத்தி வரும்போது சோதனையில் சிக்கி இருக்கிறார்கள். மேலும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுமே கடத்தலுக்கு துணைபோனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டு அவர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று அதிகாலை சார்ஜாவில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பட்டுக்கோட்டையை சேர்ந்த அகமது முகைதீன் (வயது 39) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, 233 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோல சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தனியார் விமான பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தபோது தஞ்சையை சேர்ந்த ராதாகேசவன் (41) என்ற பெண் உடைமைகளில் மறைத்து 207 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தார். 2 பேரும் கடத்திவந்த தங்கத்தின் மொத்த எடை 440 கிராம் ஆகும். அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 43 ஆயிரம் ஆகும்.

அகமது முகைதீன் சார்ஜாவிலும், ராதாகேசவன் சிங்கப்பூரிலும் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் மத்திய வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விடுமுறைக்காக திருச்சி திரும்பிய அவர்களிடம், கடத்தல் கும்பல் தங்கநகைகளை கொடுத்து அனுப்பியது தெரியவந்தது.


Next Story