பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Dec 2018 3:30 AM IST (Updated: 26 Dec 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 35). இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொழில் செய்து வருகிறார். தொழில் சம்பந்தமாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் கணபதி நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வருகிறார்.

கிறிஸ்தவரான இவர் தனது மனைவி ஜெனிபர் மற்றும் மகன் சுஜன் ஆகியோருடன் நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்காக இரவு 11 மணி அளவில் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சுரேந்தர் மற்றும் குடும்பத்தினர் வழிபாட்டை முடித்துக்கொண்டு நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்தர் மற்றும் அவரது மனைவி ஜெனிபர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 31 பவுன் நகைகள் திருட்டுபோய் இருப்பது தெரிந்தது.

சுரேந்தர் கிறிஸ்தவ ஆலயத்திற்கு புறப்பட்டு சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேந்தர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தடவியல் நிபுணர்கள், துப்பறியும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை பதிவு செய்தனர்.

மோப்ப நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரம்பலூரில் கடந்த சில மாதங்களாக கொள்ளை சம்பவங்களும், திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வரு கிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் நெருக்கடியான குடியிருப்பு பகுதியில் நகைகள் கொள்ளைப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story