லாரி மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


லாரி மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 26 Dec 2018 4:15 AM IST (Updated: 26 Dec 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

ஓசூர்,

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், ராமன் கோவில் அருகே வசித்து வருபவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் சித்தார்த் உன்னிகிருஷ்ணன் (வயது 20). ஆந்திர மாநிலம், குண்டூர் ரிங்ரோடு சுந்தரம் காலனியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணமூர்த்தி (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர்.

புதுச்சேரியில் இருந்து இருவரும் காரில் பெங்களூரு புறப்பட்டனர். புதுச்சேரி கண்கோடி அம்மன் தெருவை சேர்ந்த டிரைவர் ராஜி (27) என்பவர் காரை ஓட்டி சென்றார். அந்த கார் ஓசூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தர்கா பஸ் நிறுத்தத்தை தாண்டி நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி மாணவன் சித்தார்த் உன்னி கிருஷ்ணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ராஜி மற்றும் மாணவர் கோபாலகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜி சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார்.

மாணவர் கோபாலகிருஷ்ணமூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story