உள்ளுபீடுமட்டி கிராமத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது - ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்


உள்ளுபீடுமட்டி கிராமத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுயானை பிடிபட்டது - ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:15 AM IST (Updated: 27 Dec 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

உள்ளுபீடுமட்டி கிராமத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த ஒரு காட்டுயானையை ‘கும்கி’ யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

சிக்கமகளூரு,

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா உப்ரானி மலைப்பகுதியில் அமைந்துள்ளது உள்ளுபீடுமட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக 7 காட்டுயானைகள் முகாமிட்டு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் அந்த காட்டுயானைகளை பிடிக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த 7 காட்டுயானைகளையும் பிடிக்க அனுமதிகோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதினர். அதன் அடிப்படையில் 7 காட்டுயானைகளையும் பிடிக்க மாநில அரசு வனத்துறையினருக்கு அனுமதி வழங்கியது.

இதையடுத்து அந்த காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் சிவமொக்கா மாவட்டம் சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து அபிமன்யூ, கிருஷ்ணா, தனஞ்ஜெயா, ஹர்ஷா மற்றும் அஜய் ஆகிய 5 கும்கி யானைகளை வரவழைத்தனர். அவைகள் யானைகள் முகாமில் இருந்து உள்ளுபீடுமட்டி கிராமத்திற்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து நேற்று காலையில் கும்கி யானைகளுடன், காட்டுயானைகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் 6 காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் ஓடிவிட்டன. ஒரு காட்டுயானையை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து கால்நடை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை யானையின் மீது செலுத்தினார். இதனால் சிறிது தூரம் ஓடிய அந்த காட்டுயானை பின்னர் அப்படியே மயங்கி விழுந்தது. இதையடுத்து அந்த யானையின் கால்களை, வனத்துறையினர் கயிற்றால் கட்டினர். பின்னர் சில மணி நேரம் கழித்து அந்த யானை விழித்தது.

அதையடுத்து அது அங்கிருந்து ஓட முயற்சித்தது. அப்போது அந்த காட்டுயானையை, கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின. பின்னர் அந்த காட்டுயானையை, கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் லாரியில் ஏற்றி சக்ரேபைலு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பிடிபட்டுள்ள காட்டுயானைக்கு 25-ல் இருந்து 30 வயதுக்குள் இருக்கும். அந்த யானை நல்ல திடகாத்திரமாக உள்ளது. தற்போது அது சக்ரேபைலுவில் உள்ள யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்படும். மீதமுள்ள 6 காட்டுயானைகளையும் விரைவில் பிடிப்போம்’’ என்று கூறினார்.


Next Story