பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
காங்கேயம் பகுதியில் பல்வேறு வழிப்பறி சம்பவங்களில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூரை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் கடந்த 23.10.2018 அன்று இருசக்கர வாகனத்தில் படியூர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 ஆசாமிகள், பூங்கொடி கழுத்தில் கிடந்த 4 பவுன்நகையை பறித்து சென்றனர். இதே போல் காங்கேயத்தில் ஜவுளிக்கடை நடத்திவரும் விஜயகுமார் (வயது 47) என்பவர் கடந்த மாதம் 23-ந் தேதி காங்கேயம்-சென்னிமலை சாலையில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆசாமி ஒருவர், விஜயகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து பணத்தை பறித்து சென்றார். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த இரு சம்பவங்களில் ஈடுபட்டதாக சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கார்த்தி (24) மற்றும் தர்மபுரியை சேர்ந்த பல்லன் என்கிற கார்த்திக் (27) ஆகிய 2 பேரையும் காங்கேயம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரும் மீதும் ஏற்கனவே சேலம், தர்மபுரி மாவட்டங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மாவட்ட கலெக்டர் பழனிசாமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கார்த்தி மற்றும் பல்லன் என்கிற கார்த்திக் ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதற்கான உத்தரவு கோவை சிறையில் இருக்கும் அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
இதில் பல்லன் என்கிற கார்த்திக் ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story