நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் முற்றுகை
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குபாளையங்கோட்டை அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்த இஸ்ரவேல் மகன் எட்வர்டு ராஜா. இவர் நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 25–ந்தேதி இரவு 7 மணிக்கு இவர் வசித்து வருகிற தெருவுக்கு அருகில் கிறிஸ்துமஸ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அப்போது எட்வர்டு ராஜாவின் நண்பர்கள் ஜெய்சன், வல்லரசு ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாத நிலை இருந்ததால், வழி விடுமாறு கூறியது தொடர்பாக இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவந்திபட்டி போலீசார், எட்வர்டு ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
முற்றுகைஇதை அறிந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘‘சிவந்திபட்டி போலீஸ் அதிகாரி, எட்வர்டு ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்து உள்ளார். அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கிருந்த பெண்களையும் அவதூறாக பேசி உள்ளனர். எனவே பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.