காவேரிப்பட்டணம் அருகே 4 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
காவேரிப்பட்டணம் அருகே 4 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது அய்யம்பெருமாள் கொட்டாய் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் குசேலகுமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. நேற்று இரவு ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கினார்.
இந்த நிலையில் நேற்று காலை பூட்டி இருந்த வீட்டின் கதவு திறந்து இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குசேலகுமார் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவை மர்ம நபர்கள் கடப்பாரையால் நெம்பி திறந்து உள்ளே இருந்த 25 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரிய வந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம், 4 பவுன் நகை, கணினி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாயி மாதையன் வீட்டில் ரூ.10 ஆயிரமும், கூலித்தொழிலாளி சுப்பிரமணி (40) வீட்டில் ரூ.8 ஆயிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதே போல அருகில் உள்ள நாட்டரசன்கொட்டாய் கிராமத்தில் வேடியப்பன் (67) என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். ஆனால் அங்கு எதுவும் கொள்ளை போகவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் கொள்ளை நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற பகுதி உள்ளது. அங்கு காலி நகை பெட்டிகள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் கொள்ளையடித்த நகைகளை பூந்தோட்டம் பகுதியில் வைத்து பிரித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story